கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் இதுவரை 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதற்காக இம்மாத இறுதிவரை (மார்ச் 31) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. முக்கியமாக மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கட்டுமான பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணமாக ரூ.3,000 வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.
கட்டுமான பணியாளர்களின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை வரும் திங்கள்கிழமை செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இதற்காகப் பஞ்சாப் அரசு ரூ.96 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்டுமான பணியாளர்கள் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் இந்தச் சிரமமான சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆதரவாக அரசு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மக்கள் ஊரடங்கைப் பின்பற்றி அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்'