புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புத்துறை ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில், தலைமைசெயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரசு துறை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது வேகமாக பரவி வரும் கரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஒருசிலர் முகக்கவசம் அணியாமல் உலா வருகின்றனர். இதுவரை, முகக்கவசம் அணியாமல் வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி அது 200 ரூபாயாக வசூலிக்கப்படும்.
அத்தியாவசிய பொருள்கள், அத்தியாவசியமில்லாத கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். பால் பூத்துகள் மாலை 6 மணி வரை இருக்கும். உணவகங்களில் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். 9 மணி வரை பார்சல் வாங்கி செல்லலாம்.
கடற்கரை சாலை 10 நாள்கள் மூட திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளையும் 2 மணிக்குள் மூட வேண்டும். அனைத்து தொழில் செய்பவர்களும் 2 மணிக்கு கடைகளை மூடிவிட்டு, 3 மணிக்குள் வீட்டுக்கு செல்ல வேண்டும். இது செவ்வாய்க்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும்.
பெரிய மார்க்கெட்டில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட் ஜூன் 22 முதல் புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்படும். ஞாயிறு சந்தையை (சண்டே மார்க்கெட்) திறக்க, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுற்கான முடிவுகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா வார்டிலிருந்து தப்பிய பைக் திருடன் : தீவிரமாக தேடும் போலீஸ்