டெல்லி: கரோனா சூழலால் முதன்முதலாக மக்களவை உறுப்பினர்கள் தங்கள் வருகையை மொபைல் அப்ளிகேசன் வாயிலாக பதிவு செய்யவுள்ளனர்.
தேசிய தகவல் மையம் இந்த அப்ளிகேசனை (Attendance Register App amid coronavirus pandemic) வடிவமைத்துள்ளது. கரோனா சூழல் காரணமாக வழக்கமான வருகைப் பதிவேடை மக்களவை உறுப்பினர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் இந்த அப்ளிகேசன் மூலம் வருகையை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் மட்டுமே இந்த அப்ளிகேசனை பயன்படுத்த முடியும். மக்களவை உறுப்பினர்கள் தங்கள் முகத்தை பதிவு செய்து அடையாளப்படுத்திக் கொண்ட பின் அவர்களது வருகை சரியான முறையில் பதிவு செய்யப்படும் என மூத்த அலுவலர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.