காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரஞ்சீத் ரஞ்சன், ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கை தோல்வியில் முடிந்ததைக் காட்டுகிறது.
குடிபெயர் தொழிலாளர்கள் முதல், வணிகர்கள் வரை அனைவரும் இந்தக் கடினமான காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதையெல்லாம் தவிர்க்க முதலில் 20 சர்வதேச விமான நிலையங்களை மூடியிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசாங்கம் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதிலும், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் தான் கவனம் செலுத்தியது.
தற்போதுகூட மத்திய பாஜக அரசு ஆளாத மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கரோனா தொற்றுப் பரவல் குறித்து ராகுல் காந்தி முன்னதாகவே எச்சரித்தார்.
ஆனால் இந்த அரசாங்கம் அதற்கு செவி கொடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள், பிற கட்சிகளை ஆலோசிக்காமல் அவசரகதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலதரப்பட்ட மக்களும் துன்புறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு திட்டம் குறித்து கேட்டதற்கு, “இந்தத் தொகுப்பு மற்றொரு மோசடி திட்டம்” எனவும் பதிலளித்தார்.