கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள், அவசர தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழலில், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தீலா ஜாமல்பூரா பகுதியில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் நேற்று உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அப்பெண்ணின் நெருங்கிய சொந்தங்கள் அவரது ஈமச்சடங்குக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அறிந்த அக்கம்பக்கத்து இஸ்லாமியர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து உயிரிழந்த பெண்ணின் உடலை தோளில் சுமந்து சென்று தகனம் செய்தனர்.
இந்த ஈமச்சடங்கை ஒருங்கிணைத்தவர்களுள் ஒருவரான ஷாஹித் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கல்லீரல் கோளாறு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை காலை உயிரிழந்தார்.
ஊரடங்கு உத்தரவால் அவரது சொந்தங்கள் வரமுடியாமல் போனதால், நாங்களே அவரது உடலை சுமந்து சென்று சோலா விஷ்ராகாட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்தோம்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் உடல் நலக்கோளாறு காரணமாகப் பல நாள்களாக அவதிப்பட்டுவந்தார். அவருடைய கணவர் மோகன் நாம்தியா ஒரு தினக்கூலி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்" என்றார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், இஸ்லாமியத் தொப்பி, முகக்கவசம் அணிந்தவாறு சில ஆண்கள் உயிரிழந்த பெண்ணின் உடலைத் தோள்களில் ஏந்திச் செல்வது போல காட்சி அமைந்துள்ளது.
மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள இந்த மனிதாபிமான செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்..
இதையும் படிங்க : நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் வரவேற்பு!