இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை குறித்தத் தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த தகவல் பின்வருமாறு:
கரோனா வைரசால், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பால் நேற்று(டிச.23) ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 93 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 95.75 விழுக்காடாகவும், கரோனா தொற்றுக்கு 2 லட்சத்து 83 ஆயிரத்து 849 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 16 கோடியே 53 லட்சம் 8 ஆயிரத்து 366 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (டிச. 23) மட்டும் 10 லட்சத்து 39 ஆயிரத்து 645 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23 ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16 ஆம் தேதி, 50 லட்சத்தையும், 28 ஆம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது.
அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.