கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கோவாவின் இரு மாவட்டங்களையும் (தெற்கு-வடக்கு) 'பசுமை மண்டலங்கள்' என்று அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மாநிலத்தில் எந்தவிதமான கோவிட் -19 பாதிப்புகளும் இல்லை என்றார். எனினும் கரோனா வைரஸூக்கு எதிரான போராட்டம் இன்னும் வெகு தூரம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “மக்களின் ஆரோக்கியத்திற்காக 'மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை முறையை' கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கரோனா தடுப்பு போராளிகளின் முயற்சிகள் மற்றும் கோவா மக்களின் ஆதரவுடன், நமது மாநிலம் இப்போது இந்திய அரசாங்கத்தால் ஒரு பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கோவிட் -19க்கு எதிரான போர் வெகு தூரம் உள்ளது. மக்களின் ஆரோக்கியத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும்.
இது பாதுகாப்பான சுகாதார விதிமுறைகளான, சுத்திகரிப்பு, முகக் கவசம் அணிவது, தகுந்த விலகல் கடைப்பிடிப்பு மற்றும் முழு ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருப்பது போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே உலக தொழிலாளர் தினமான இன்று கரோனா வைரசை எதிர்த்துப் போராடும் முன்னணி ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார். கோவாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஏழு பேரும் குணமடைந்து வீடு திரும்பினர்.