இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காற்றை விட மிக வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,148 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,55,191 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 27,497 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7,24,577 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தற்போது 4,02,529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 62.7 விழுக்காடாக உள்ளது.
இந்நிலையில், உலகளவில் ஒரு மில்லியன் (10 லட்சம்) மக்கள் தொகையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் இந்தியாவில்தான் மிகக் குறைவாக உள்ளது என சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அலுவலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், உலகளவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில்தான் மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவில் இதன் எண்ணிக்கை 837ஆக உள்ளது. இந்தியாவை ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 12 முதல் 13 மடங்கு அதிகமாக உள்ளது. அதேபோல் உலகளவில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் இந்தியாவில்தான் மிகக் குறைவாக உள்ளது. இத்தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் விகிதம் 20.4 ஆக உள்ளது. மற்ற நாடுகளில் இந்த விகிதம் 21 முதல் 33 மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவில் கரோனா நோயாளிகளின் விகிதம் 8.07 விழுக்காடாக உள்ளது. இந்த விகிதத்தை 5 விழுக்காடு வரைக்கும் குறைவாக கொண்டு செல்ல பல சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.