சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கட்டுக்கடங்காமல் பரவி உலகையே தன் கோரப்பிடிக்குள் சிக்கவைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்புகளும் மளமளவென உயர்ந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், உலகச் சுகாதார அமைப்பும் தான் உலகளவில் கரோனா பரவுவதற்குக் காரணம் எனக் கூறி பிகாரில் உள்ள பீட்யா உரிமையியல் (சிவில்) நீதிமன்றத்தில் மூரத் அலி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கானது நோய் பரப்புதல், தரமற்ற மற்றும் போலியான கருவிகளை விற்பனை செய்தல், குற்றச் சதி, கொலை மற்றும் கொலை முயற்சி, தனிமைப்படுத்தப்பட்ட விதிகளுக்கு கீழ்படியாமை, அவதூறு பரப்புதல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோரையும் விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஜூன் 16ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக, இதே விவகாரத்தில் அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் ஆகியோருக்கு எதிராக முஸாபராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'எங்க சேவையை நீங்க பயன்படுத்தக் கூடாது' -காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்!