கர்நாடகாவில் சுமார் 16% மக்கள் கரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடிகளை கொண்டுள்ளனர் என்று செரோ சர்வே மூலம் தெரியவந்ததாக அம்மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விதான சவுதாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், “கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவலை மதிப்பிடுவதற்காக செப்டம்பர் 3-16 ஆம் தேதிவரை ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்தில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் விகிதாச்சாரமும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் இதில் அடங்குவர்.
மக்கள் தொகையில் மூன்று குழுக்கள் உள்ளடக்கப்பட்டன. அவை:
(i) குறைந்த ஆபத்துள்ள குழு, அதாவது, பிறப்புக்கு முந்தைய கிளினிக்கில் கலந்துகொள்ளும் கர்ப்பிணிகள், மருத்துவமனைகளில் வெளிநோயாளர் துறையில் கலந்துகொள்ளும் நபர்கள் / குழந்தைகள் அல்லது நோயாளிகள்.
(ii) மிதமான-அபாயக் குழு, அதாவது, பேருந்து நடத்துநர்கள், காய்கறி சந்தைகளில் விற்பனையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள நபர்கள் மற்றும் சந்தைகள், மால்கள், சில்லறை கடைகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் போன்ற அதிக கூட்டம் கூடும் இடங்களில் உள்ள நபர்கள்.
(iii) அதிக ஆபத்துள்ள குழு வயதானவர்கள் மற்றும் கொமொர்பிட் நிலையில் உள்ள நபர்கள்.
நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கு விரைவான ஆன்டிஜென் சோதனைகள் (RAT), RT-PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில், நோயெதிர்ப்பு சக்தியை அறிய IgG ஆன்டிபாடிகளுக்கான சீரம் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஐசிஎம்ஆர் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக வலையமைப்பு பயன்படுத்தப்பட்டது.
கடந்த காலத்தில் 16.4% மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கெடுக்கப்பட்ட மக்களில் கரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தத் தொகை டெல்லியில் 29.1%, மும்பை சேரி அல்லாத அமைப்புகளில் 16%, சேரி அமைப்புகளில் 57%, இந்தூரில் 7.8%, புதுச்சேரியில் 22.7%, சென்னையில் 32.3%. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேசிய செரோபிரெவலன்ஸ் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இந்தியாவில் மற்ற ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது, கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு அதிகளவிலான தகவல்களை சேகரித்துள்ளது. இதில் தற்போதைய மற்றும் கடந்தகால நோய்த்தொற்றுகள் பற்றிய தகவல்கள் அடங்கும்.
கர்நாடக மாநிலம் முழுவதும் மாவட்டம், தாலுகா, கிராமங்களில் 290 மருத்துவமனைகளை மையமாகக் கொண்ட இடங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் மூலம் இந்தத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. விரைவான ஆன்டிஜென் சோதனைகள், ஆர்.டி.-பி.சி.ஆர்., ஆன்டிபாடி (ஐ.ஜி.ஜி.) ஆகிய மூன்று சோதனைகளையும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் முன்னெச்சரிக்கை / பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும் இந்த ஆய்வு பயனுள்ளதாக இருக்கும். கரோனா தொற்றிலிருந்து நோய்த்தொற்றிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையத்தை நிறுவ அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.