இதுகுறித்துப் பேசிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் சஞ்சய் ராய், " எய்ம்ஸ் மருத்துவமனையின் அறவியல் நெறிமுறைகள் குழு மனிதர்களிடத்தில் தடுப்பு மருந்தை சோதிக்க அனுமதியளித்துள்ளது. நல்ல உடல்நலத்துடனும், கோவிட்-19 பாதிப்பு இல்லாதவர்களையும் நாங்கள் தேர்வு செய்யவுள்ளோம். 18 முதல் 55 வயதுவரை உள்ளவர்களிடத்தில் இச்சோதனையை நடத்தவுள்ளோம்.
இந்தச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்பும் நபர்கள் திங்கள் முதல் பதிவு செய்துகொள்ளலாம். Ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 7428847499 எண்ணைத் தொடர்புகொண்டோ தங்கள் விவரங்களை அளிக்கலாம். டெல்லி எய்ம்ஸ் மனிதர்களிடத்தில் செய்யவுள்ள சோதனைக்கு 100 நபர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.
ஏற்கனவே சில தன்னார்வலர்கள் சோதனைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தும் முன்பு இன்று முதல் அவர்களின் உடல்நலம் குறித்து சோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம்" என்றார். மனிதர்களிடத்தில் மேற்கொள்ளவுள்ள சோதனை டெல்லி எய்ம்ஸ், பாட்னா உள்ளிட்ட சில இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தியாவிலுள்ள ஸைடஸ் காடிலா, பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்கள் தயாரித்த கோவிட்- 19க்கான தடுப்பு மருந்தை எலி, சுண்டெலி, முயலில் செலுத்தியதில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த முடிவுகளை அவ்விரு நிறுவனங்களும் மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறையிடம் தந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
ஏழு நிறுவனங்களுக்கு மேல் கோவிட்-19க்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறிவந்தாலும், இவ்விரு நிறுவனங்களுக்கு மட்டும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை மனிதர்களிடத்தில் சோதனை நடத்த அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குதிரை பேர ஆடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் அபிஷேக் மனு சிங்வி!