ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம். வெங்கடேஷ்வர ராவ் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசுக் கட்டடங்களில் ஆளுங்கட்சியினரால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கொடியின் வண்ணம் பூசப்பட்டுவருகிறது.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. ஆகவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 'அரசு சுவர்களில் கட்சியின் வர்ணம் பூசக்கூடாது. ஆகவே இதனை 10 நாள்களுக்குள் நீக்க வேண்டும்' என்று ஜெகன் மோகன் அரசை கண்டித்ததுடன், இது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசத்தினர் புகார் அளித்திருந்தனர். இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ட்விட்டரில், “ஏற்கனவே இருந்த வண்ணங்களை அழித்து கட்சியின் நிறம் பூசப்பட்டுள்ளது.
இதனை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டுவர ரூ.3 கோடி தேவைப்படும். இந்தச் செலவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஏற்குமா?" எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - அஞ்சும் தெலுங்கு தேசம்