சென்னை: அமெரிக்கா, லக்சம்பெர்க், லிதுவேனியா ஆகிய நாடுகளின் ஒன்பது செயற்கைக் கோள்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்திய ராக்கெட், விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 26 மணிநேர கவுன்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.
பி.எஸ்.எல்.வி-சி.49 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளையும், லிதுவேனியா நாட்டின் தொழில் நுட்பம் சார்ந்த செயற்கைக்கோளையும், லக்சும்பெர்க் நாட்டின் நான்கு கடல் சார் செயற்கைக் கோள்களையும், பல்வேறு பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் நான்கு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தவுள்ளது. இது நடப்பாண்டில் இந்தியாவிலிருந்து ஏவப்படும் முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் இந்த செயற்கைக்கோள் நாள் முழுவதும் ராணுவ கண்காணிப்பை தீவிரப்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டிற்குப் பிறகு பி.எஸ்.எல்.வி-சி.50 விரைவில் விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதத்தில் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ராக்கெட் ஏவ குறைந்தபட்சம் 30 நாள் கால அவகாசம் தேவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் காணொலி மூலம் திருவனந்தபுரத்திலிருந்தே ராக்கெட்டுகளை இயக்கும் முறையை வடிவமைத்து வருவதாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த செயல்முறைக்காக தற்போது அதிக அளவிலான ஆராய்ச்சியாளர்களை ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ராக்கெட்டில் செல்வதற்கு முன் குட்டி ஹாலிடே எடுத்துக்கொண்ட டாப்ஸி