சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொடிய கரோனா வைரஸ், கடந்த 18 நாள்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப்பில், இந்த வைரஸ் பெருந்தொற்றால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். பாதிப்பிலிருந்து நாட்டு மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
வேகமாக பரவி வரும் இதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான முடக்கத்தை பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், ரயில், விமானம் உள்ளிட்ட பயண சேவைகளும் தடை செய்யப்பட்டது.
பொதுமக்கள் வீதிகளில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் போதிய விழிப்புணர்வின்றி வீதிகளில் சுற்றி வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் கண்டிப்பான விதிமுறைகளை விதித்திருக்கிறது.
இதன் காரணமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள், ஆதரவற்றோர் தினசரி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இணை ஆணையர் நரேஷ் டோக்ரா தலைமையிலான காவல்துறையினர் மேற்கு ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பால், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுப் பொருள்களை விநியோகித்தனர்.
இது குறித்து பேசிய இணை ஆணையர் நரேஷ் டோக்ரா, "பெரும்பாலான மக்கள் இப்போது உணவு உள்ளிட்ட பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால் ஐந்து நாள்களாக தங்கள் வீடுகளில் ஏழை மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை காவல்துறையும் நிர்வாகமும் வழங்க முடிவு செய்திருக்கிறது. அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிக்கின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேலைவாய்ப்பு இழந்து நிற்கும் விளிம்புநிலை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல்துறை தொடர்ந்து புரியும்”, என்றார்.
இதையும் படிங்க : கரோனா: ரூ. 1,500 கோடி நிதியுதவி அறிவித்த டாடா!