உலகம் முழுக்க கரோனா வைரஸ் (கோவிட்19) தொற்றுக் கிருமி விஷம்போல் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க முகக் கவசம் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது.
ஆகவே முகக்கவசத்துக்கு மருத்துவச் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து சண்டிகரிலுள்ள புரைல் மாடல் சிறையில் கைதிகளுக்கு முகக் கவசம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து கைதிகள் தற்போது முகக் கவசம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர். இது குறித்து சிறை அலுவலர் சௌத்ரி கூறுகையில், “முகக் கவசம் தயாரிக்கும் பணிகளில் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.
இதற்காக மேக்கிங் ஆப் மாஸ்க் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ஒரு குழுவுக்கு 15 கைதிகள் வீதம் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 700-800 முகக் கவசங்கள் வரை தயாரிக்கின்றனர். ஒரு முகக் கவசத்தின் விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவைகள் விரைவில் கடையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இதனை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதன் முதலாக அறியப்பட்ட கரோனா வைரஸ் என்னும் கோவிட்19 வைரஸ் தொற்று நோய் 160 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு உதவ கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்!