இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மூவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததாக முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனையின் தனி அறையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பாதிப்படைந்த முதல் மாணவியின் மருத்துவ அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து, மற்ற இரு மாணவிகள் முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர். இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் சைலஜா கூறுகையில், "திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் உடல்நிலை தேறியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் ரத்த மாதிரி புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரலாஜிக்கு அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது" என்றார்.
மாணவிகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றை கேரள அரசு மாநில பேரிடராக அறிவித்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை அரசு திரும்பப்பெற்றது.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டன. சீனாவில் இதுவரை, கொரோனா தொற்றால் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்தியாவுக்கு சீனா வேண்டுகோள்!