கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தென்மேற்கு ரயில்வேயின் (SWR) கிரந்திவிரா சங்கோலி ராயண்ணா (கே.எஸ்.ஆர்) பிரதான ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே மேலாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, மூன்று மாடிகள் கொண்ட அலுவலகம் கிருமிநாசினி தெளித்து சுத்திகரிக்கப்பட்டு மூடப்பட்டது. அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை அந்த அலுவலகத்தின் மூத்த அலுவலர் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.
மேலும், ரயில்வே மருத்துவமனை ஊழியர்கள், பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து விரைவாக பரிசோதித்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் 50 வயதுடையவர். அவரது முழங்கால் சிகிச்சைக்காக ரயில்வே மருத்துவமனை சென்றிருந்த அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர் அங்கு அவருக்கு கோவிட் -19 சோதனை செய்ததில் தோற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட ரயில்வே மருத்துவமனை ஊழியர்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவற்றின் முடிவுகள் வர காத்திருக்கிறார்கள்" என்று ரெட்டி கூறினார்.
மேலும், பெங்களூருவில் தற்போது வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844 ஆக உள்ளது. இவர்களில் நேற்று 14 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் 384 பேர் குணமடைந்துள்ளனர். 408 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, பெங்களூருவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உள்ளது.