சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கோவிட் 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக அந்நாட்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது சீனாவில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தாலும், மற்ற நாடுகளில் கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது.
ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் கோவிட் 19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இது குறித்து மக்கள் பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இத்தாலியில் இதுவரை 8,514 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 631 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 1,004 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 70-79 வயதுக்குள் இருப்பவர்கள் 32 விழுக்காட்டினரும் 80-89 வயதுக்குள் இருப்பவர்கள 45 விழுக்காட்டினரும் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 5,038 பேர் கோவிட் 19 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 877 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், மேலும் 2,599 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் " என்றார்.
சீனாவுக்கு அடுத்து, இந்த வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. இந்த வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க, அந்நாட்டு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அந்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறவிருந்த அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி இறுதி சடங்குள், திருமணங்கள் உள்ளிட்ட மத சடங்குகளையும் ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுள்ளது. மேலும், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இத்தாலியுடனான அனைத்து விமானங்களையும் ஸ்பெயின் அடுத்த இரு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவால், இனி அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புகள்