மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிமுதல் ஜூன் மாதம் 15ஆம் தேதிவரை மீன்பிடித் தடைக்காலமாகும்.
இதன் காரணமாக புதுச்சேரி கடற்பகுதிகளில் நேற்றுமுதல் ஜூன் 15ஆம் தேதிவரை 61 நாள்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் கனகசெட்டிகுளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக் குப்பம் மீனவ கிராமம் வரையிலும் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் புதுச்சேரி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் காரைக்கால் பிரதேச கடல் பகுதிகளில் மீன் பிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் மீன்பிடித் துறைமுகங்கள் மூடப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தற்போது மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் ஐந்தாயிரத்து 500 இரட்டிப்பாக்கித் தர வேண்டும் என்றும் படகு பராமரிப்புச் செலவுகளையும் இரட்டிப்பாக்கித் தர வேண்டும் எனவும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மறுக்கும் நாகை மீனவர்கள்: காரணம் இதுதானாம்!