புதுச்சேரியில் நாளுக்கு நாள் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை கூட்டத்தில், ஒரு நாள் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று(ஆக.25) காலை 6 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தொடங்கியது. இதனையடுத்து காலை 6 மணி முதல் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள்,பெட்ரோல் பங்குகள், மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் பால் பூத்துக்கள், மருந்தகங்கள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன.
ஊரடங்கால் முக்கிய கடை வீதிகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அண்டை மாநிலங்களிலிருந்து வாகனங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனை செய்யப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடியவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஆங்காங்கே காவல் துறையினர் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.