கேரளாவில் பதானம்திட்டாவில் உள்ள அரண்முலாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், கரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இவர், நேற்று (செப்.05) இரவு ஆம்புலன்ஸ் மூலமாக ப்ரண்ட்லைன் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அச்சமயத்தில் ஆம்புலன்ஸில் இரண்டு இளம்பெண்கள் இருந்துள்ளனர்.
அதில் ஒரு பெண்ணை கோழஞ்சேரி மருத்துவமனையில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர், அடுத்தது நேராக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள காலி இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு கரோனா பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அதனை யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணை ப்ரண்ட்லைன் சிகிச்சை மையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் இறக்கிவிட்டுள்ளார். தொடர்ந்து, உடனடியாக அப்பெண் அங்கிருந்த அலுவலர்களிடம் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கிரிகாட் நவுபலை கைது செய்தனர். தற்போது, அப்பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.