புதுச்சேரி அருகே வில்லியனூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் நீலவாணன். இவரின் மனைவி கவிப்பிரியா. இவர்களிடம் 26 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணம் மோசடி செய்ததாக, ஆரியப்பாளையத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம், அவரது மனைவி மகேஷ்வரி மீது ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்க மறுத்த காவலர்கள், நீதிமன்றம் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சமுத்திரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் நீலவாணன் மீது ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் யுரேனியம், தங்கத்தை புதுவைக்கு நீலவாணன் கடத்தி வந்ததை பார்த்ததாக தெரிவித்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நீலவாணன்-கவிப்பிரியா தம்பதியினர், டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.
அதில், "செல்வம் - மகேஷ்வரி ஆகியோரின் தூண்டுதலால் நாங்கள் கொடுத்த மோசடி புகாரை மறைக்க எங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் மதிப்பு பற்றி அறிந்தவர்கள்தான் எங்கள் மீது புகார் அளித்துள்ளனர். இவர்களுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இவர்களுக்கு புதுவை அமைச்சர் ஒருவரும் பக்க பலமாக உள்ளார். எனவே, யுரேனியம் புகார் மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.