அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இன்றோடு 70ஆண்டுகள் ஆகின்றன். அரசியலமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய அண்ணல் அம்பேத்கரின் நினைவை போற்றும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக, 2015ஆம் ஆண்டுதான் இதனை கொண்டாட தொடங்கினோம்.
இதனை முன்னிட்டு அவரின் பேரனும், வன்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கரை நமது ஈடிவி பாரத் செய்தியாளர் பேட்டி எடுத்தார். வாழ்வதற்கான அடிப்படை கொள்கைகளை மக்களுக்கு அளித்து, சமுதாயத்தை மாற்றுவதற்கான திறவுகோளாக இந்திய அரசியலமைப்பு விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
நமது செய்தியாளர் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு.
காலம் காலமாக அரசியலமைப்பு எப்படி செயல்படுத்தப்பட்டுவருகிறது, அது குறித்த உங்கள் கருத்து என்ன?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய சமுதாயம் பெரும் மாற்றம் கண்டுள்ளது. சமுதாயத்தின் கொள்கையும் அரசியலமைப்பும் ஒருங்கே சேர தொடங்கியுள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் மிகப் பெரிய சாதனை இது.
இதில் அண்ணல் அம்பேத்கரின் பங்கு என்ன?
தொலைநோக்கு பார்வைகொண்ட திறமையான அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பு இன்றும் சமுதாய தேவைக்கேற்ப உள்ளது. பழைய தலைமுறையினர், இளம் தலைமுறையினர் என அனைவரும் தங்களின் கருத்துகளை வெளிபடுத்தும் உரிமையை அரசியலமைப்பு தந்துள்ளது.
இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் பலரின் பங்கு இருந்தாலும், அம்பேத்கரை அரசியலமைப்பின் தந்தை என குறிப்பிடுகிறோம். அது எதற்காக?
அரசியலமைப்பை உருவாக்க இரண்டு கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. அதில், சட்ட வரைவுக்குழுவிற்கு தலைமை வகித்தவர் அம்பேத்கர். காலம் காலமாக அவரை பற்றி மக்கள் பல்வேறுவிதமான கருத்துகளை தெரிவித்துவருகிறார்கள். அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பற்றிய உங்களின் கருத்து?
அரசியலமைப்பின் அடிப்படையை மாற்ற முடியாது, ஆனால், திருத்தம் மேற்கொள்ளலாம் என தலைமை நீதிபதி சிக்ரி கேசவநந்த பாரதி வழக்கின்போது தெரிவித்திருந்தார். அதனை நினைவுகூற விரும்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 நீக்கப்படுவதற்கு அரசியல் சாசன மன்றத்தின் பரிந்துரை வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் ஆன பிறகும்கூட, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது கேள்வி எழுகிறது.
புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, முன்னர் இருந்த நீதிபதிகள் போன்று துணிவுடன் செயல்படவேண்டும். காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை விரைந்து நடத்தி உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியலமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வர தற்போதுள்ள அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இதில் உங்கள் கருத்து என்ன?
பல கொள்கைகளை கொண்டு இந்தியா இயங்கிவருகிறது. ராஷ்டிரிய சுயம்சேவா சங்கம், தங்களின் நீண்ட கால கொள்கையான ஆரியவர்த்தத்தினை நிறுவ முயற்சிக்கிறது. ஆனால், அது நடக்காது. அரசியலமைப்பு அளித்த சுதந்திரத்தை மக்கள் விரும்புகிறார்கள். எனவே, ஆர்.எஸ்.எஸ். கொள்கையை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அயோத்தி வழக்கின் தீர்ப்பை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. அரசியலமைப்புக்கு உட்பட்டுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?
கதைகளை காட்டிலும் உச்ச நீதிமன்றம் உண்மைக்கு முக்கியத்துவம் தரும் என எதிர்பார்த்தேன். சர்ச்சைக்குரிய நிலத்தை தொல்லியல் துறை ஆராய வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேர்மையின்பால் உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருந்தால், அதன் முடிவுகளை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.
அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவுசார் நேர்மையை கடைபிடிப்பதில் அது தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் அது விமர்சனங்களை எதிர்கொள்ளும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
தற்போதைய சூழலில் அரசியலமைப்பு எப்படி செயல்படவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
சமூகம் செயல்படும்வரை அதன் பொறுப்பு அரசியலமைப்பிடமே இருக்கும்.
இதையும் படிங்க: உயரப் பறக்கும் மதச்சார்பின்மை!