கச்சா எண்ணெய் இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தாலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த ஜூன் 7ஆம் தேதியிலிருந்து ஜூன் 29ஆம் தேதிக்குள், 22ஆவது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
இதன்மூலம் கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.17 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 11.14 ரூபாயும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பல்வேறு தரப்பினரும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவந்தநிலையில், காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தில் இறங்கியுள்ளது.
இன்று தொடங்கி ஜூலை 4ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களுக்கு மாட்டு வண்டி, சைக்கிள் உள்ளிட்டவற்றில் சென்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக அவதிக்குள்ளாகிவருகின்றனர். எனவே, அதனைக் குறைக்கும் விதமாக அரசு வரியைக் குறைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அக்கட்சித் தொண்டர்கள் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர். இப்போராட்டத்தின்போது தகுந்த இடைவெளி போன்ற வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டன.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் குறித்து அமித்ஷா பெயரில் வெளியான ட்வீட் போலியானது!