மாநிலங்களவையில் காலியாகவுள்ள உறுப்பினர்களின் பதவிக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜகவினர் தன்வசம் இழுக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறது.
முன்னதாக, பாஜகவின் குதிரைபேரத்தால் குஜராத்தில் எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், குஜராத்தில் காங்கிரசின் பலம் குறைந்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜகவின் குதிரைபேரத்திலிருந்து காங்கிரஸ், அதன் ஆதரவு கட்சி சட்டப்பேவரை உறுப்பினர்களைக் காப்பாற்ற அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெய்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது, "ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனநாயக வழிமுறைக்கு எதிராக பாஜக செயல்பட்டுவருகிறது. அரசியலைப்புச் சட்டத்தை மதிக்காமல் தனது பண பலத்தையும், பதவி பலத்தையும் வைத்து குதிரைபேரம் நடத்தி ஜனநாயத்தைப் படுகுழியில் தள்ளியுள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள கரோனா ஊரடங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பாஜக தனக்குத் தேவையான அனைத்தையும் செயல்படுத்திவருகிறது.
வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற பாஜக தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டுவருவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.