நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தது. அக்கட்சின் முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்தனர். இந்நிலையில், நேற்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்தும் குறைந்தபட்ச ஒத்துழைப்புத் திட்டம் குறித்தும் ஆலோசிக்க காங்கிஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், பாஜக அரசானது நாடாளுமன்ற மரபைப் பின்பற்ற வேண்டும். முக்கிய மசோதாக்களை அவசரச் சட்டமாக நாடாளுமன்றத்தில் நேரடியாகத் தாக்கல் செய்யாமல் முதலில் நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். மேலும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை முடிவு செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதாலும் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை, முத்தலாக் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களும் தாக்கலும் செய்யப்படவிருப்பதால் இக்கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.