காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சல்மான் குர்ஷித், காங்கிரஸ் கட்சி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அவர், காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றதைவிட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ததே கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறியிருந்தார்.
தற்போது சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்தாலும் ராகுல் காந்தி கட்சித் தலைமையில் இருந்து சென்றது காங்கிரஸ் கட்சியில் வெற்றிடத்தை உண்டாக்கியதாவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
சல்மான் குர்ஷித்தின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவரும் ராகுல் காந்திக்கு நெருங்கிய நண்பருமான ஜோதிராதித்யா சிந்தியாவும் கட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் சாம்பல் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சி தற்போது முறையான வடிவத்தில் இல்லை. எனவே கட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து முதலில் சுயபரிசோதனை செய்ய வேண்டும். தற்போது உள்ள நிலைமைக்கு தீர்வு கண்டு கட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
இம்மாத இறுதியில் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கியத் தலைவர்கள் கட்சி குறித்து வேதனை தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.