நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை பொதுத்தேர்தல்களின் முடிவுகள் நேற்று (மே 23) வெளியானது. இதில் பாரதிய ஜனதா கட்சி 350 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் 52 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. மேலும், அமேதியில் போட்டியிட்ட ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். அமேதி தொகுதி காங்கிரஸின் கோட்டை என்றிருந்த நிலையில், இந்தத் தோல்லி காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் ராகுல் பேசுகையில், 'மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். மக்களவைத் தேர்தலில் தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள். தொடர்ந்து போராடுவோம்' எனத் தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது முறையாக தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.