கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தை ”நாட்டின் பொருளாதாரம் சரிந்த தசாப்தம்” என தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், "மோடி தலைமையிலான ஆட்சியில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர்.அரவிந்த் சுப்ரமணியன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தை ”நாட்டின் பொருளாதாரத்தின் சிறந்த காலம்” எனக் கூறினார்.
ஆனால், அதே மோடி தலைமையிலான ஆட்சியில் தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விமர்சித்து உயிரற்ற தசாப்தம் எனக் கூறியிருக்கிறார்.
தற்போது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். ஏன் நடப்பு ஆண்டு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவிகிதமாக சரிந்தது என்று. மேலும் இந்தச் சரிவினை எண்ணி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மிகவும் பெருமை கொள்கிறார் என்று நினைக்கிறேன்" என்று விமர்சித்துள்ளார்.