"வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த தொழிலாளர்களை உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு கொண்டுவருவதற்காக காங்கிரஸ் 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால், அந்தப் பேருந்துகளை உத்தரப் பிரதேச எல்லைக்குள் செல்வதற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதியளிக்கவில்லை.
குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்தது காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேருந்துகள் என்பதால், இந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அரசியல் செய்துவருகிறார்" எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகின்றது.
இந்நிலையில், எல்லையிலுள்ள பேருந்துகளின் விவரங்களை அனுப்புமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு உத்தரப்பிரதேச அரசு ஒரு கடிதம் அனுப்பியது.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியினர் அனைத்து வாகனங்களின் விவரங்கள், வாகன எண்கள், ஓட்டுநர்களின் விவரங்களை உத்தரப் பிரதேச அரசிடம் ஒப்படைத்தனர்.
அந்தப் பேருந்துகளின் எண்களில் சில இருசக்கர வாகனங்கள், மூன்றுசக்கர வாகனங்களின் எண்கள் உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு குற்றஞ்சாட்டியது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், “உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உணர்ச்சியற்றவர். மாநில அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறது.
ஆனால், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ பேருந்துகள் இயக்க அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியது இந்த விவகாரத்தில் தேவையின்றி அரசியல் செய்துவருகிறார் என்பதையே காட்டுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாட் கூறுகையில், “மாநிலத்தின் மண்டல போக்குவரத்து அலுவலர்கள் தற்போது பேருந்து உரிமையாளர்களை அச்சுறுத்திவருகின்றனர்.
மேலும், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவுவதை நிறுத்துவதற்கு மாநில அரசு தடைகளை உருவாக்கிவருகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், 'இவை தெளிவான இரட்டை நிலைப்பாடு' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பிரியங்கா காந்தியின் தனிச் செயலாளர் மீது எஃப்ஐஆர் !