கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
குறிப்பாக, அரசின் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர் அதில் முன்வைத்திருந்தார்.
ஏற்கனவே, பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவிட்டதாக பாஜக இதற்கு பதிலடி தந்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறுகையில், "காங்கிரஸ் வழங்கும் ஆலோசனைகளை முதலில் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த வேண்டும். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் நாடு ஒன்றினைந்து கரோனாவை வீழ்த்த வேண்டும்.
குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான நேரம் இதுவல்ல. சோனியா காந்தி மக்களை திசை திருப்புகிறார். காங்கிரஸ் கட்சியின் இந்த மனப்பான்மை துரதிருஷ்டவசமானது" என்றார்.