வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திரும்பும் இந்தியர்கள், தாங்களாகவே கோவிட்-19 பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு எதிராக, மத்திய- மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜாவை, “கோவிட் ராணி” என்று பொருள்படும்படி விமர்சித்தார்.
மேலும், கேரளாவில் நிபா வைரஸ் (2018) கண்டறியப்பட்டபோதும், அவர் ராஜ குமாரி போல் நடந்துகொண்டார் என்றும் கூறினார். இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் பெண் அமைச்சர் மீதான இந்த பாலியல் விமர்சனத்துக்கு பொறுப்பேற்று பொதுமக்கள் முன்னிலையில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையில், “கோவிட்-19 பெருந்தொற்றை சிறப்பாக எதிர்கொண்டதாக உலகம் முழுக்க பாராட்டப்படும் அமைச்சர் நம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை எண்ணி அவர் பெருமைப்பட்டிருக்க வேண்டும்.
மாறாக அனைவரும் மதிக்கும் ஒரு நபரை ஆபாசமாக, பாலியல் ரீதியாக அவர் விமர்சித்துள்ளார். அத்தகைய மனிதர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் என்பது வெட்கக்கேடானது. சுகாதாரத் துறை அமைச்சர் மீது ஏதேனும் விமர்சனங்கள் இருந்தால் அதனை மக்கள் சொல்லட்டும்.
கோவிட்-19 வைரஸ் போராட்டத்துக்கு எதிராக முன்னணியில் நிற்கும் ஒரு பெண்ணை தனிப்பட்ட முறையில் தாக்குவதுதான் உங்களின் கலாசாரமா? இது அவமானம். ஆகவே தங்களின் பொறுப்பற்ற கருத்துக்கு பொதுமக்கள் முன்னிலையில் நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும்.” என கூறியுள்ளார்.
முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ரமேஷ் சென்னிதாலா, “கேரள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாட்டுவாழ் மலையாளிகள் ஆகியோர் தாயகம் திரும்பும்நிலையில் வாசற்கதவை அடைக்கும் முயற்சியாக மாநில அரசின் திட்டங்கள் உள்ளது என குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: மணிப்பூர்: காங்கிரஸை வீழ்த்திய பாஜக, குஷியில் முதலமைச்சர்!