முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நூற்றாண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு பல்வேறு விழாக்களை நடத்தி ராவுக்கு மரியாதை செய்து வருகிறது.
அந்த வகையில், தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று (செப்டம்பர் 8) நரசிம்ம ராவின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த கௌரவ விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு அளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி, "முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர். அவரது ஆட்சியில் தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக அவருடன் இணைந்து பங்காற்றிய மன்மோகன் சிங்கிற்கும் பாரத ரத்னா விருதை மத்திய அரசு அளிக்கவேண்டும்.
இந்திய அளவில் மட்டுமல்ல, உலகின் "மிகச் சிறந்த" பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகவே மன்மோகன் சிங் கருதப்படுகிறார். நாட்டின் பொருளாதார மீட்சிக்காக பணியாற்றிய நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய இருவருக்கும் நன்றிக் கடனை நாம் செலுத்த வேண்டும். இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது" என்று கூறினார்.