புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கரோனா பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அதில் கரோனா நோய் பரவலை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் 3 ஆயிரத்து 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தேவையில்லாமல் வாட்ஸ் அப் மூலம் இஸ்லாமியர் குறித்து தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் அரசு நடவடிக்கை எடுக்கும்.
இம்மாதம் 15 ஆம் தேதி காலை ஊரடங்கு சட்டம் படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். புதுச்சேரி அரியாங்குப்பம் சொர்ன நகர் பகுதியில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் நோய்த் தொற்று சம்பந்தமாக ஆயிரம் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மருத்துவத் துறையினர் சார்பில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று அப்பகுதியில் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
எனவே பொது இடங்களில் மக்கள் தேவையற்று வெளியே வரவேண்டாம். ஏப்ரல் 3 முதல் ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை அரசு நிறுவனமான பான்லே எனப்படும் பால் பூத்துகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கி வருகின்றன" எனத் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து பேசுகையில், "பொதுமக்கள் மளிகை கடைகள், வங்கி, ஏடிஎம் ஆகிய பகுதிகளில் கூடுவதை ஒழுங்குபடுத்த முன்னாள் ராணுவத்தினர் 3 ஆயிரம் பேர், சீனியர் என்சிசி தன்னார்வாலர்கள் துணையுடன் மக்கள் கடைகளில் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.