புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், விழுதியூர் பகுதியில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு தரப்பு மக்களுக்கு இலவச பட்டா வழங்குவதற்கான வேலைகளை மாவட்ட நிர்வாகம், திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தனும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுதியூர் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், விரைந்து இலவச பட்டா வழங்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மனு அளிக்க சென்ற தெற்குபேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, எதிர் தரப்பினர் தாக்கியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர் பதில் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நடந்துவந்த பிரச்னை நேற்று கலவரமாக மாறியது. இதில் ஒரு தரப்பு மக்கள் வசிக்கும் கட்டிகோவில்தெருவில் புகுந்த 50க்கும் மேற்பட்ட கும்பல், கல், கட்டையைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருநள்ளாறு மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் வீரவல்லபன் தலைமையிலான காவல்துறையினர் வருகை தந்தனர். ஆனால், அங்கு காவல்துறையின் கண்முன்னே கல் வீச்சு சம்பவங்கள் கடுமையாக நடைபெற்றன. அப்போது எடுக்கப்பட்ட காணொலிக்காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இக்கலவரத்தில் மூன்று காவலர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர் இரு பிரிவிலும், கலவரத்துக்குக் காரணமான 20க்கும் மேற்பட்டோரை திருப்பட்டினம் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறை கண்முன்னே நடந்த இருசமூகத்திற்கான கலவரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொத்துத் தகராறில் மகனை வெட்டிப் படுகொலை செய்த தந்தை