மத்திய அரசு தொழிலாளர்கள் நலச் சட்டங்களில் ஒன்றான 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக உயர்த்தியதைக் கண்டித்தும்; ஆட்டோ உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்க வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டமானது காந்தி வீதி, பாரதி வீதி, மிஷின் வீதி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் நடைபெற்றது. காந்தி வீதி அமுதசுரபி எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
இதைப்போல் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான 8 மணி நேரப் பணி நேரத்தை 12 மணி நேரம் ஆக உயர்த்துவதைக் கண்டித்தும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்தும், முறைசாரா தொழிலாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்; தொழிலாளர் நலச் சட்டங்களை முடக்குவதைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமானோர் சமூக இடைவெளியைக் கடைபிடித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: உணவிற்கு வழியில்லை... குடிபெயர்ந்த தொழிலாளர் தற்கொலை!