புதுச்சேரி: இன்று (அக்.15) திறக்கப்பட்ட திரையரங்குகளை புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ்கண்ணா நேரில் வந்து ஆய்வு செய்தார்.
கரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு என சகஜ வாழ்க்கைக்குத் திரும்பின. பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பில் திரைப்பட ரசிகர்கள் இருந்தனர் .
இந்த நிலையில், தற்போது மத்திய அரசு கடந்த 30ஆம் தேதி வெளியிட்ட ஐந்தாம் கட்ட தளர்வில் கரோனா விதிமுறைகள் முகக் கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது .
அதன்படி புதுச்சேரியில் தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சினிமா அரங்குகள் இன்று (அக்.15) முதல் திறக்கப்பட்டுள்ளன. இன்று (அக்.15) பகல் காட்சி, 12 மணி காட்சிகள் துவங்குவதற்கான அறிவிப்பு வந்ததை அடுத்து ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தோர் மற்றும் கவுன்டரில் டிக்கெட் எடுக்க மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர் வந்திருந்தனர்.
அதேசமயம் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே ரசிகர்கள் அமர வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திருவள்ளூர் சாலை ஷண்முகா திரையரங்கில் புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ்கண்ணா நேரில் வந்து ஆய்வு செய்தார், அரசு விதிகளை திரையரங்க நிர்வாகம் பின்பற்றுகிறதா என்பது குறித்த பணிகளை மேற்கொண்டார்.
மேலும், ஒரு சில தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளின்படி தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.