பிகார் மாநிலத்தின் ஜே.டி.யு. தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இம்முறை நடைபெற்றுவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியைக் கண்டுள்ளது.
மத்தியில் என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்துவந்து, அண்மையில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து களம் காண்கின்றது.
சிராக் பாஸ்வானின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் அவரது கட்சித் தொண்டர்களையும், கணிசமான அளவு பொதுமக்களையும் ஈர்த்துள்ளதாக அறிய முடிகிறது.
இந்நிலையில் இன்று தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "தன்னை பிகாரின் எஜமானர் என்று கருதும் நிதிஷ்குமார் 'சாத் நிஷ்சே' திட்டத்தில் செய்த ஊழல் முறைகேடுகள் காரணமாக நாளை வருமான வரித் துறையின் சோதனைகளுக்கு உள்ளாகி சிறைக்குச் செல்வார்.
இதற்கெல்லாம் அஞ்சியே பிரதமர் மோடியின் தயவை எதிர்பார்த்து நிற்கிறார். 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடியை எதிர்த்து அரசியல் செய்த முதலமைச்சர் நிதிஷ்குமார் யாதவ், இன்று ஆட்சியைத் தொடர பிரதமரின் கண் பார்வைக்காக ஏங்கி நிற்கிறார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல், இயற்கை பேரழிவுகள், இடம்பெயர்வு, வேலைவாய்ப்பு, வேளாண்மை, கல்வி, சுகாதாரப் பிரச்னைகள் எழும்போதெல்லாம் மௌனமாக இருந்த அவர் இன்று மக்களை மீண்டும் ஏமாற்ற ஆட்சி அதிகாரத்தை தேடிவருகிறார்.
அதற்காகப் பரப்புரை செய்கிறார். பிகார் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. நிதிஷ்குமாரின் ஆட்சி கனவு இத்துடன் நிறைவடையவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.1.25 லட்சம் கோடி சிறப்புத் தொகுப்புக்கு போட்டியாக பிகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமாரால் ரூ.2.7 லட்சம் கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட 'சாத் நிஷ்சே' (ஏழு தீர்வுகள்) திட்டத்தில் நடந்துள்ள இமாலய ஊழல் குறித்து நாங்கள் ஆட்சியமைத்தால் உரிய விசாரணை நடத்தப்படும் என்பது உறுதி.
எங்கள் கட்சியின் சார்பில் பிகார் மக்களுக்கு நாங்கள் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் நடைபெற்ற அத்தனை ஊழல் முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டிப்போம் என உறுதியாக கூறுகிறேன். ஊழல் முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.