புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், உலக மகளிர் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "வடநாட்டில் பெண்கள் அடிமையாக வீட்டில் முக்காடு போட்டுக் கொண்டு உள்ளனர். நம் நாட்டில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் மகளிருக்கு கல்வியில் முன்னுரிமை கொடுக்க 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆண்களை விட பெண்கள் சிறப்பான முறையில் படிக்கின்றனர். பட்டம் பெறுகின்றனர். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் மகளிர் பங்கு இல்லாமல் நாடு முன்னேற்றம் அடைய முடியாது. பெண்களுக்கு சம உரிமை கொடுத்தால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடைய முடியும்" என்றார்.
இதையும் படிங்க: மகளிர் தின விழா - 550 மரக்கன்றுகளை நட்ட 550 பெண்கள்!