புதுச்சேரி: கரோனா விழிப்புணர்வு தேசிய புத்தக கண்காட்சியானது புதுச்சேரி எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் இன்று (டிச. 18) தொடங்கியது. இந்தப் புத்தக கண்காட்சி வரும் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தகங்களின் விவரங்கள்
புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி எழுத்தாளர்களின் 15 புத்தகங்கள் வெளியிடப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது.
தள்ளுபடியில் புத்தகங்கள்
தினமும் காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டு இரவு 8 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், புத்தகம் வாங்குவோருக்கு 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் கண்காட்சியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சியை திறந்து வைத்த முதலமைச்சர்
முன்னதாக இந்தக் கண்காட்சியினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து, புத்தக கண்காட்சியினை பார்வையிட்டார். மேலும், மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய விழிப்புணர்வு புத்தகங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.