நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டுத் தொடரில் நேற்று (செப்.17) வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, பண்ணை சேவை, அத்தியாவசியப் பொருள்கள் மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், "விவசாயிகள் தொடர்பான இரண்டு மசோதாக்களை பாஜக தலைமையிலான அரசு நேற்று மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியானாவிலுள்ள விவசாயிகள் சாலையில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது மக்களுக்கும் ஆளும் அரசாங்கத்திற்கும் உள்ள இடைவெளியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இந்த மசோதாக்கள் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தூணையே கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த மசோதாக்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை, பொதுக் கொள்முதல், பொது விநியோக முறையை கொண்டுவர உதவும் எனக் கூறினாலும், இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயிகள் அதிகபட்ச ஆதரவு விலையைவிடக் குறைந்த விலைகளை நிர்ணயிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவர்.
மேலும், இந்த மசோதாக்கள் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் முடிவெடுத்துள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகள், கூட்டாட்சி மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்ச ஆதரவு விலை ஆயிரத்து 150 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டும், தாங்கள் தனியார் நிறுவனங்களுக்கு 850 ரூபாய்க்கே நெல் விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கிறனர். இது தொடர்பாக மாநில அரசுகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேளாண் மசோதாக்கள், விவசாயிகளின் வாழ்க்கையில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்து விவசாயப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவசாயிகளை சுரண்டும் புதிய ஜமீன்தாரி சட்டங்களை அறிமுகப்படுத்தும் மோடி அரசு - காங்கிரஸ் தாக்கு!