சத்தீஸ்கர் மாநிலத்தின் முக்கிய பிரச்னையாக அம்மாநிலத்தில் உள்ள நக்சல்கள் இருந்துவருகின்றனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதுங்கியுள்ள நக்சல்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும், பொது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதுண்டு.
அந்த வகையில், கடந்த 2005, 2006ஆம் ஆண்டுகளில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மூர் கிராமத்தில் நக்சல்கள் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது. அச்சமயத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் அந்த கிராமத்திலிருந்த தொடக்கப்பள்ளி ஒன்று பயங்கரமாக சேதமடைந்தது. அதன் பின் அப்பள்ளி மூடப்பட்டதால் அங்கு படித்த மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவியது. மேலும் நக்சல்களின் அச்சுறுத்தல் காரணமாக அக்கிராமத்திலிருந்து மக்கள் வெளியேறினர்.
அதன்பின் 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் பத்மூர் கிராமத்திற்கு மக்கள் வரத் தொடங்கினர். எனினும் நக்சல் தாக்குதலில் சேதப்படுத்தப்பட்ட பள்ளியானது சீரமைக்கப்படாமல் இருந்ததால் இளம் சிறுவர்கள் கல்வி கற்க முடியாமல் இருந்துவந்தனர்.
இதனையடுத்து, பத்மூர் கிராமத்தில் மூடப்பட்டிருந்த பள்ளியை மீண்டும் திறக்க கல்வி அலுவலர் முகமது ஜகிர் கான் முடிவு செய்தார். பின்னர் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு பள்ளிக்கட்டடம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அந்த பள்ளியானது மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளே பள்ளியில் சேர்க்கப்பட்ட 52 குழந்தைகளுக்கும் புத்தகங்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், குழந்தைகளுக்கு மதிய உணவும் அளிக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் அக்கிராமத்தின் தலைவர், கல்வி அலுவலர் மொகம்மது ஜகிர், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்வி அலுவலர் ஜகிர், நக்சல்களால் பாதிக்கப்ட்ட குத்தெர், குண்டாப்பூர், ஜப்பேலி உள்ளிட்ட கிராமங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.