கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளிவர முடியாத சூழல் நிலவி வருகிறது. வெளிமாநிலத்திற்கு வேலைக்கு வந்தவர்கள் பலரும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே சத்தீஸ்கர் மாநில வணிக வரித்துறை அமைச்சர் கவாசி லக்மா 250 கி.மீ., பயணம் செய்து சாமியாரைப் பார்க்கச் சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரிலிருந்து 250 கி.மீ., பயணம் செய்து ராய்காரின் கோஷம்னாரா ஆஷ்ரமத்தில் உள்ள பாபா சத்யநாராயணா என்ற சாமியாரைப் பார்க்க அமைச்சர் கவாசி லக்மா சென்றுள்ளார். இவர் தங்குவதற்காக மூடப்பட்டிருந்த மூன்று நட்சத்திர விடுதி ஒன்று திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அமைச்சர் கவாசி பேசுகையில், ''நான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டிலேயே இருப்பதற்கு மிகவும் சலிப்பாக உள்ளது. எந்தவித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
ராய்காரில் உள்ள சில இடங்களில் விதிகளை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் திடீரென ஆய்வு செய்வதற்காக கிளம்பிவிட்டேன். வரும் வழியில் ஆசரமத்தில் உள்ள சாமியாரைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. அதனால் அங்கு சென்றேன். ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் என்னைப் பார்க்க மறுத்துவிட்டார். மீடியாக்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களைப் பாதுகாப்பது மட்டுமே எங்களின் முதன்மையாக குறிக்கோள்'' என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36ஆக உள்ளது. அதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: ஆந்திராவில் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!