சந்திரயான் 2 பயணம்:
இஸ்ரோவின் சக்திவாய்ந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 15ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டத்தை இஸ்ரோ தற்காலிகமாக கைவிட்டது.
பின்னர், ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஜூலை 24, ஜூலை 26, ஜூலை 29, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் சந்திரயான் 2இன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி, புவியின் சுற்றுப்பாதையிலிருந்து விலகிய சந்திரயான் உந்துவிசை மூலம் 'லூனார் டிரான்ஃபர் டிரெஜெக்டிரி' (Lunar Transfer Trajectory) பாதையில் செலுத்தப்பட்டு நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது.
இதையடுத்து, ஆகஸ்ட் 20, 21, 28, 30 ஆகிய தேதிகளில் நான்கு கட்டங்களாக சந்திரயான் 2, நிலவின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றியமைக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தரைக்கும் சந்திராயன் 2-வுக்குமான தொலைதூரம் குறைந்தது.
செப்டம்பர் 1ஆம் தேதி ஆர்பிட்டர் எனப்படும் வட்டமடிப்பானிலிருந்து பிரக்யானுடன் (ஆய்வூர்தி) 'விக்ரம்' லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறங்க புறப்பட்டது.
செப்டம்பர் 7 நள்ளிரவு 1:30 மணியளவில் விக்ரம் லேண்டர் 70 டிகிரி கோணத்தில் மெதுவாக தரையிறங்கத் தொடங்கியது. பின்னர், நிலவின் தரையிலிருந்து 2 கி.மீ. தொலை தூரத்திலிருந்த விக்ரம் லேண்டர் 2:20 மணிக்கு இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரை தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்தின் பாகங்கள் குறித்து காணலாம்
வட்டமடிப்பான் (Orbitor), 'விக்ரம்' லேண்டர், பிரக்யான் (ஆய்வூர்தி) ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதுதான் சந்திரயான் 2 விண்கலம். இதன் மொத்த எடை மூன்று ஆயிரத்து 850 கிலோவாகும்.
நிலவில் தரையிறங்குவதற்காக தயார் செய்யப்பட்டது 'விக்ரம்' லேண்டர்'. மறைந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் விக்ரம் அம்பலா சாராபாயை நினைவுகூரும் விதமாகவே இதற்கு 'விக்ரம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆயிரத்து 471 கிலோ எடைகொண்ட விக்ரம் திரவ எதிர்வாயு சக்தியில் செயல்படும் இன்ஜினை கொண்டுள்ளது.
அத்துடன், 27 கிலோ எடையும், ஆறு சக்கரங்களையும் கொண்ட பிரக்யான் நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது. சூரியசக்தி மூலம் இயங்கும் பிரக்யான் நிலவில் அரை கி.மீ. பயணிக்கவிருந்தது.