சந்திராயன்-1 விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலம் 312 நாட்கள் செயல்பாட்டிலிருந்து நிலவின் மேல் பகுதியிலுள்ள தாதுக்கள் குறித்து ஆய்வு செய்தது. அப்போது, நிலவில் நீர்த் துளிகள் இருப்பதையும் சந்திராயன்-1 கண்டுபிடித்தது.
அதனைத் தொடர்ந்து வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சந்திராயன்-2 வுக்கான 20 மணிநேர கவுண்ட் டவுன், இன்று காலை 6.51 மணிக்குத் தொடங்கியது.
இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்தியாவின் மதிப்பைப் பறைசாற்றும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காகப் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளோம். இந்த விண்கலம் செப்டம்பர் 6 அல்லது 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்” என்றார்.