நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 2 ஜூலை மாதம் 22ஆம் தேதி விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சுற்றுகலன் பகுதியும் விக்ரம் லேண்டர் பகுதியும் தனித்தனியாக பிரித்துவிடப்பட்டன.
பின்னர் லேண்டரை நிலவின் தென்பகுதி நோக்கி, அறிவியல் அறிஞர்கள் இயக்கினர். ஆனால் கடைசி நேரத்தில் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டு, அறிவியல் அறிஞர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அறிவியல் அறிஞர்கள் 14 நாட்களாக முயற்சித்தும் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இருப்பினும் சுற்றுகலன் தொடர்ந்து நிலவை சுற்றிவருகிறது. இது தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நிலவை ஆய்வு செய்யவுள்ளது.
இந்நிலையில் சுற்றுகலன் புவி காந்த மண்டலம் குறித்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சூரியனிலிருந்து எலக்ட்ரான், புரோட்டான், சில தனிமங்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன. இது புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு, அண்டவெளியில் சுற்றிவருகின்றன. இது புவியிலிருந்து 22 ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில், புவி காந்த மண்டலமாக உருவாகியிருக்கிறது. அண்டவெளியிலிருந்து துகள்கள், எரிகற்கள், ஆபத்தான கதிர்களிலிருந்து புவியை இவைகள் பாதுகாக்கிறது.
![chandrayaan-2-orbiters-payload-detects-charged-particles-on-moon](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4644255_earth.jpg)
இதன் காரணமாக இதனை புவியின் வேலி என்பார்கள். இது அளவில் மிகப்பெரியது. குறிப்பாக நிலவைத் தாண்டி அமைந்திருக்கும். ஆதலால், 29 நாட்களுக்கு ஒருமுறை புவியைத் தாண்டி கடந்துசெல்லும்.
இது கடந்துசெல்ல ஆறு நாள்கள்வரை ஆகும். இந்த ஆறு நாள்களும், சந்திரயான் 2 இது குறித்து ஆய்வு நடத்தும். சந்திரயான் 2வில் பல நுண் கேமராக்கள் (Micro Cameras) பொருத்தப்பட்டுள்ளன. இவைகள் இந்த ஆய்வுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியின் வேலியை ஆய்வு செய்ய சந்திரயான் 2 காத்திருப்பது அறிவியல் அறிஞர்களின் மற்றொரு சாதனையாகக் கருதப்படுகிறது.