கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிய நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெருநகரங்களில் வேலை பார்த்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு, பலநூறு மைல்கள் நடந்துச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, தொழிலாளர்கள் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் செல்வதற்கு ஏதுவாக 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவெடுத்து, முதல்கட்டமாக சில ரயில்களை இயக்கியது.
இந்நிலையில், சிக்கலுக்குத் தீர்வுகாண மாநில அரசுகளும் உரிய ஒத்துழைப்பைத் தர வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் திரும்பிச் செல்வதற்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாகவும், மத்திய அரசுடன் இணைந்து இந்த இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசுகள் பொறுப்புடன் ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் உள்துறைச் செயலர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சிக்குள் அதிரடி மாற்றத்தை மேற்கொள்ளும் சோனியா