மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. கிராமங்களில் சாலைகளை சீரமைத்தல், குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பொதுவான செயல்களில் இவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களின் வேலைகள் பறிக்கப்படுவதாகவும், ஏற்கனவே வேலை செய்தவர்களுக்கு தற்போது வரை முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ஊதியம் வழங்க மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மத்திய அரசு கால தாமதம் ஏற்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.