முப்படைகளையும் ஒருங்கிணைக்கவும் முப்படைகளும் அரசும் எளிய முறையில் தொடர்புகொள்ளும் வகையிலும் முப்படைத் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்டது. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி இப்பதவியை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்தாலும், டிசம்பர் மாதம்தான் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கின.
இப்பதவியை உருவாக்க பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, பின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவப் படை தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்ததால், அவரையே முதல் முப்படைத் தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமிக்கப்போவதாக தகவல் வெளியாகியது.
அந்தத் தகவலை உறுதிசெய்யும் விதமாக மத்திய அரசு டிசம்பர் 30ஆம் தேதி பிபின் ராவத்தை முப்படைத் தலைமைத் தளபதியாக நியமித்ததாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான அடுத்த நாளே பிபின் ராவத் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முப்படைத் தலைமைத் தளபதிக்கான பொறுப்புகள், நியமனம் ஆகியவை அடங்கிய அறிக்கையைத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் தலைமையிலான குழு மத்திய அரசிடம் அளித்தது. இந்த அறிக்கையிலுள்ள தகவல்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதியில் தலைமைத் தளபதிக்கு என்னென்ன பொறுப்புகள் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, முப்படைத் தலைமைத் தளபதி, மற்ற மூன்று தளபதிகளின் முடிவில் தலையிடக்கூடாது, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே தலைமைத் தளபதிக்கும் வழங்கப்படும் போன்ற முடிவுகளும் இறுதிசெய்யப்பட்டன. மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ விவகாரத் துறை என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அது தலைமைத் தளபதியின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தலைமைத் தளபதி பிபின் ராவத் தலைமையின் கீழ் புதிய ராணுவ விவகாரத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துறையின் கீழ் 2 இணைச் செயலர்கள், 13 துணைச் செயலர்கள், 22 செயலர்கள் என 37 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் படைகள், மூலதனங்களைக் கையகப்படுத்துதல், தளவாடங்கள் கொள்முதல் மற்றும் கூட்டுத் திட்டமிடல் , ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மற்றும் பணியாளர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை இத்துறை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத் திட்டமிடலின் மூலம் முப்படைகளையும் ஒன்றிணைப்பதால், செலவுகளை சரியான முறையில் பயன்படுத்தி அதிக செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இத்துறை செயல்படும். வெளியிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை உருவாக்கவும் இத்துறை ஊக்குவிக்கும். ராணுவ அலுவலர்களும் குடிமைப் பணி அலுவலர்களும் இணைந்து இத்துறையில் பணியாற்றுவார்கள்.
ஏற்கனவே, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்புத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சித் துறை, பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்புத் துறை, முன்னாள் ராணுவ வீரர்கள் நலத் துறை ஆகிய நான்கு துறைகள் உள்ள நிலையில், ராணுவ விவகாரத் துறை ஐந்தாவதாக இணைந்துள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!