தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்கவுள்ளது. கரோனா ஊரடங்கு நேரத்தில் சாத்தான்குளம் காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய வியாபாரிகள் லாக்கப் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளச் சொல்லி உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையினர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டதால், திமுக உள்பட அத்தனை எதிர்க்கட்சிகளும் இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கு ஜூன் 30ஆம் தேதி முதல் சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. இதுதொடர்பாக ஒரு காவல் ஆய்வாளர், இரு காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் சில காவலர்களை சிபிசிஐடி கைது செய்தது. இந்த சூழலில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.